மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசாரத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: கொரோனாவின் 2 ம் கட்ட பாதிப்பு துவங்கியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரம் துவக்கியுள்ளன. அதிகம் பேர் கூடுகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. முககவசம் அணிவதில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூட அனுமதி கூடாது. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள், தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்கஉத்தரவிட வேண்டும்.இவ்வாறு ரமேஷ்குறிப்பிட்டார். தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு சிறந்த முறையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. மனுதாரர் தேவையின்றி மனு செய்துள்ளார். மனுவைதள்ளுபடி செய்கிறோம் என்றனர்.