செஞ்சி:செஞ்சி அருகே பொது வினியோக குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக கூறியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம். செஞ்சி அடுத்த கொணலுார் ஊராட்சி, புலிவந்தி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் பாலமுருகன்,34; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு, கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி ஏதோ செய்து கொண்டிருந்தார்.அ தைத் பார்த்து சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரிடம் விசாரித்ததில், , தனது வீட்டிற்கு குடிநீர் வராததால், குடிநீரில் விஷம் கலந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து, செஞ்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும், அனந்தபுரம் போலீசுக்கும் ஊராட்சி செயலர் தனலட்சுமி தகவல் தெரிவித்து, குடிநீர் வினியோகத்தை நிறுத்திவைத்தார்.நேற்று காலை அங்கு வந்த பி.டி.ஓ.,க்கள் சுப்ரமணியன், அறவாழி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்ரமணியன் ஆகியோர், ஆய்வக பரிசோதனைக்காக குடிநீரின் மாதிரியை சேகரித்தனர்.பின்னர், 30 ஆயிரம் லிட்டர் குடிநீரை வெளியேற்றி, தொட்டியை சுத்தம் செய்த பிறகு, குடிநீரை நிரப்பி வினியோகித்தனர்.
இதுகுறித்து வி.ஏ.ஓ., தமிழ்வாணன் கொடுத்த புகாரின்பேரில், குடிநீரில் விஷம் கலந்தது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளில் அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, பாலமுருகனை கைது செய்து, விசாரித்தனர். அதில், குடிநீர் தொட்டியில் பேதி மாத்திரை கலந்து விட்டதாகவும், பின்னர் எதுவும் கலக்கவில்லை என முரணாக கூறியுள்ளார்.அதனால், குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதா என்பது ஆய்வக முடிவுக்கு பிறகே தெரிய வரும் என போலீசார் கூறினர்.