விருதுநகர் : விருதுநகரில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கண்ணன் நேற்று வெளியிட்டார். 16 லட்சத்து 68 ஆயிரத்து 751 வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 192 பேர் அதிகம் உள்ளனர்.
கலெக்டர் கூறியதாவது: மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளில் நவ. 17 முதல் டிச. 15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், பாகம் மாறுதல் உள்ளிட்ட பணிகள் சிறப்பு முகாம்கள் மூலம் நடத்தப்பட்டது. இதில் 54 ஆயிரத்து 793 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களுக்காக 13 ஆயிரத்து 170 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். சிவகாசி தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 60 ஆயிரத்து 941 வாக்காளர்கள் உள்ளனர். விடுபட்ட வாக்காளர்கள் இன்று (ஜன. 21) முதல் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் விண்ணப்பிக்கலாம் என்றார்.டி.ஆர்.ஒ., மங்களராமசுப்பிரமணியன், சப் கலெக்டர் தினேஷ்குமார், நேர்முக உதவியாளர் காளிமுத்து, ஆர்.டி.ஓ.,க்கள் முருகேசன், காசிசெல்வி, தாசில்தார் அய்யக்குட்டி உடனிருந்தனர்.