விருதுநகர் : மாவட்டத்தில் பெய்த மழையால் 24 அடி நீர் மட்டம் கொண்ட வெம்பக்கோட்டை அணை 14 அடியை எட்டியது. இதனால் பாசனம், குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை வைப்பாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. அணை நீரை பயன்படுத்தி ஆண்டு தோறும் 6, 275 டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இயலும். 1,361 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணை நீர் மட்டம் 24 அடி. பாசனத்திற்கு தண்ணீர் திறக்க 2 மதகுகளும், உபரி நீரை வெளியேற்ற 5 மதகுகளும் உள்ளன.
சிவகாசியின் முக்கிய குடிநீர் ஆதரமாக இந்த அணை மட்டுமே உள்ளது. தினமும் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் கொண்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்காக அணையின் உட்புறத்தில் 10 அடி ஆழத்தில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு ஆண்டுகளாக பருவமழை கை கொடுக்காததால் அணை வறண்டு காணப்பட்டது. பாசன வசதி செய்ய இயலவில்லை. குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையால் அணை நீர் மட்டம் 14 அடியாக உயர்ந்துள்ளது. பாசனம், குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.