கோவை:ரேஸ்கோர்ஸ் திட்டசாலையில் குடிநீர் கசிவை சரிசெய்த மாநகராட்சிப்பணியாளர்கள், குடிநீர் வினியோகத்தையும் நிறுத்தி விட்டதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கோவை மாநகராட்சி, 71வது வார்டுக்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் திட்டசாலை, ராமசாமி மளிகை கடைக்கு முன்பகுதியில், குடிநீர் குழாயில் துளை ஏற்பட்டு நீர் கசிந்து வந்தது.குடிநீர் வீணாவது குறித்து அப்பகுதி மக்கள், சுங்கத்திலுள்ள மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். நீண்ட இழுபறிக்கு பின், மாநகராட்சி பணியாளர்கள் கசிவை சரிசெய்தனர்.ஆனால் வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு செல்லும், குடிநீர் குழாய் இணைப்பு வால்வையும் சேர்த்து அடைத்து விட்டனர். அதனால் குடியிருப்புக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது. சுங்கத்திலுள்ள உதவிபொறியாளர் மற்றும் குடிநீர் குழாய் பழுது சரிசெய்வோரை சந்தித்து, மீண்டும் ஒரு முறை புகார் தெரிவிக்கப்பட்டது.ஒரு மாத காலமாகியும், குடிநீர் வினியோகம் சரிசெய்யப்படவில்லை. குடியிருப்போரின் குடிநீர் தேவையை, உடனடியாக சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும்.