சிவகங்கை:''பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல் உட்பட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப்.,6ல் சென்னையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்'' என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:''அரசு ஊழியருக்கு மாநில பென்ஷன் திட்டம் மற்றும் 2003க்கு பின் ரத்து செய்த ஊழியர் பணிக்கொடையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.7500 வழங்க வேண்டும்.
கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி துறைகளில் உள்ள 3 லட்சம் திட்ட ஊழியர்களுக்கு முறைப்படுத்திய சம்பளம், விடுப்பு, மருத்துவ காப்பீடு வசதிகள் செய்து தரவேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். கருவூலத்துறையை தனியார் மயமாக்கும் வகையிலான செயல்பாடுகளை கைவிட்டு, பழைய முறைப்படி சம்பளம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப்.,6 மதியம் 2:00 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.இப்போராட்டத்தை துவக்கி வைக்கும் ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் மூர்த்தி, சுப்பராயன் எம்.பி.,விளக்க உரை ஆற்றுகின்றனர்'' என்றார்.