உடுமலை:உடுமலை அருகே, மூன்று கன்றுகளை ஒரே ஈற்றில், ஈன்ற மாட்டை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.உடுமலை சின்னவீரம்பட்டியை சேர்ந்தவர் தம்பிகவுண்டர்; பால் உற்பத்திக்காக, பசு மாடுகளை பராமரித்து வருகிறார். இதில், அவரது சிந்து ரகத்தை, சேர்ந்த பசு மாடு, ஒரே ஈற்றில், மூன்று கிடாரி கன்றுகளை ஈன்றது.இம்மாட்டுக்கு, சினை ஊசி வழியாக, சினையேற்றம் செய்துள்ளனர். வழக்கமாக, பசுக்கள், ஒரு கன்றும், சில நேரங்களில், இரு கன்றுகளை ஈனும். ஆனால், ஒரே நேரத்தில், மூன்று கன்றுகளை, ஈன்ற பசு மாட்டையும், கன்றுகளையும், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.கால்நடைத்துறையினர் கூறியதாவது: பசுவின் கர்ப்பப்பையில் உள்ள ஒரு முட்டை, காளையின் விந்துவுடன், இணைந்து கருமுட்டையாக மாறி, ஒரு கன்றுக்குட்டி பிறப்பது வழக்கம். சில நேரங்களில் கர்ப்பப்பையில், கூடுதல் முட்டைகள் இருந்தால், இவ்வாறு, மூன்று கன்றுகள் ஈனும்.மூன்றுமே, கிடாரியாக இருப்பதால், ஆரோக்கியத்துடனும், பின்னாளில், சீரான பால் உற்பத்திக்கும், எவ்வித தடையும் இருக்காது.இவ்வாறு, தெரிவித்தனர்.