உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள, அவுட் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் இல்லாததால், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து, பயணிகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கிராமப்புற பஸ்கள் என, தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.பயணிகள் பாதுகாப்புக்காக, பஸ் ஸ்டாண்டில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு, ஒரு எஸ்.ஐ., தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, போலீசார் இல்லாமல், இந்த போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டுள்ளது.இதனால், பயணிகளிடம் பிக்பாக்கெட், செயின் பறிப்பு, திருட்டுச்சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகிறது. தினமும், 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலையில், குற்றவாளிகளை கண்காணித்து திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து, போலீசார் கண்டு கொள்வதில்லை.வெளியூர்களிலிருந்து வரும் பொதுமக்கள், பணம், நகை ஆகியவற்றை பறி கொடுத்து விட்டு, பல கி.மீ., நடந்து சென்று, உடுமலை ஸ்டேஷனில் தெரிவித்தாலும், புகார் பதிவு செய்யாமல் அலைகழிக்கப்படும் நிலை உள்ளது.எனவே, பஸ் ஸ்டாண்ட்டிலுள்ள அவுட் போலீஸ் ஸ்டேஷனை திறந்து, போதிய போலீசார் நியமித்து பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, திருப்பூர் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.