கோவை:தேர்தல் பிரசாரத்துக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, கோவை வருவதால், ரோட்டை சுத்தம் செய்து, மையத்தடுப்புகளில் பெயின்ட் பூசும் பணியில், மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் பழனிசாமி, இன்றிரவு கோவை வருகிறார். நாளையும் (23), நாளை மறுதினமும் (24), கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.நாளை காலை, 7:05 மணிக்கு, டவுன்ஹால் கோனியம்மன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, பிரசாரத்தை துவக்குகிறார். அவிநாசி ரோடு மேம்பாலம் வழியாக, மரக்கடை, என்.எச்., ரோடு, செட்டி வீதி, பெத்தே கவுண்டர் சாலை வழியாக செல்கிறார். ராஜ வீதி, செல்வபுரம், குனியமுத்துார், சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பேசுகிறார்.
இதையடுத்து, நகர சாலையோரம் பரவிக்கிடக்கும் மணலை அள்ளி, சுத்தம் செய்யும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளில், 'பேட்ச் ஒர்க்' செய்கின்றனர். மையத்தடுப்புகளில் புதிய பெயின்ட் பூசுகின்றனர். இப்படியாவது கோவை 'பளிச்' ஆகிறதே...பரவாயில்லை!