கோவை:தேங்காய் மற்றும் கொப்பரை விலையை, வேளாண் பல்கலை நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தில், கோவை, திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல் மாவட்டங்களில், தேங்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு, 37.01 லட்சம் டன் தேங்காய் விளைந்தது.பருவமழை காரணமாக, நடப்பாண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதிக வரத்து காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை, தேங்காய் மற்றும் கொப்பரை விலை குறித்து, சந்தை ஆய்வு மேற்கொண்டது.ஆய்வு முடிவின் அடிப்படையில், பிப்ரவரி - மார்ச் வரை, தரமான தேங்காய், பண்ணை விலை கிலோவுக்கு ரூ. 33 முதல் 35 வரை இருக்கும். தரமான கொப்பரை கிலோ, 100 முதல் 105 வரை இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு, கோவை வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தை, 0422-2431405 என்ற எண்ணிலும், தொழில் நுட்ப விபரங்களுக்கு, 0422-6611284 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.