பந்தலுார்;நீலகிரியில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட பசு மாடுகள் தொடர்ந்து உயிரிழந்தும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 1,079 பேருக்கு மாடுகள் வழங்கப்பட்டன.அதில், பெரும்பாலான மாடுகள், நோய்வாய்ப்பட்ட நிலையிலும், வயது முதிர்ந்த நிலையிலும் இருந்ததால், மூன்று மாதங்களாகியும், பால் கூட தரவில்லை. அதில், 100க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பயனாளிகளும்; அகில பாரதிய ஆதி விகாஸ் பரிஷத் நிர்வாகிகளும், மத்திய பழங்குடியினர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், பழங்குடியின அலுவலர் மெரீனாவிடம் விசாரணை நடத்தினார். நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். ஆனால், அதிகாரி மீது நடவடிக்கைக்கு பதில், இடமாற்றம் செய்யப்பட்டு, அரியலுார் மாவட்ட பழங்குடியினர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.கால்நடை டாக்டர் பாலாஜி கூறுகையில்,''தொடர்ச்சியாக உயிரிழந்த மாடுகள் அனைத்தும், நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளன. இதனால், பழங்குடியின மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முறைகேட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.