மதுரை: மதுரையில் இம்மாதம் துவக்கம் முதல் திடீரென டெங்கு காய்ச்சல் பரவல் வேகம் எடுத்துள்ளது. இருபது நாட்களில் 45 பேரை தாக்கியுள்ளது.
இம்மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் டெங்கு பரவல் அதிகம் இருக்கும். இம்முறை துவக்கத்தில் சற்று மெதுவாக பரவியது. அக்.,ல் 6, நவ.,ல் 14 பேர் பாதிக்கப்பட்டனர். டிச.,ல் பரவல் வேகமானது. இந்த மாதத்தில் மட்டும் 45 பேரை டெங்கு தாக்கியது. இந்த மாதம் டெங்குவின் வேகம் அதிகரித்துள்ளது.
முதல் 20 நாட்களில் மட்டும் 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் பாதிப்பு அதிகரிக்கலாம். பிப்., மார்ச் வரை டெங்கு பரவல் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏனென்றால் 2020ல் ஜன.,ல் 102 பேர், பிப்.,ல் 54 பேர், மார்ச்சில் 46 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏப்.,ல் இப்பாதிப்பு 3 ஆக சரிந்தது. மார்ச் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2020 ல் நகரில் 120 பேர், புறநகரில் 159 பேர் என 279 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இறப்பு எதுவும் இல்லை. ஜன., பிப்., மாதங்களில் மக்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். வீடு மற்றும் வெளிப்புறங்களில் திறந்த நிலையில் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என்றனர்.
மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மருந்து தெளித்து கொசுக்களை ஒழிக்க முன்வர வேண்டும்.