ராஜபாளையம் : ராஜபாளையத்திற்கு 900 கோடி அளவிற்கு திட்டங்கள் கொண்டு வந்தது எம்.எல்.ஏ., பூட்டியிருந்த குற்றாலத்தை திறந்தவர் தென்காசி எம்..பி., என மக்கள் கிராம சபை கூட்டத்தில் இருவரும் மாறி மாறி புகழ்ந்து கொண்டனர்.
ராஜபாளையத்தில் தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை நடந்தது. இதில் பேசிய எம்.எல்.ஏ, தங்கபாண்டியன், தொகுதியில் 20 ஆண்டுகளாக எம்.எல்.ஏ., வாக இருந்தவர்கள் எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை. என்னால் ரயில்வே மேம்பாலம், கூட்டு குடிநீர், பாதாள சாக்கடை போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டங்கள் அனைத்தும் அவர் கொண்டு வந்ததாக கூறி வருகிறார்.
இத்தனை நாட்களாக பூட்டியிருந்த குற்றாலத்தை டெல்லியில் பேசி திறக்க வைத்தவர் தி.மு.க., எம்.பி.,. தனுஷ்குமார் , என்றார்.எம்.பி., தனுஷ் குமார் பேசிய போது,சங்கரன் கோயில் எம்.எல்.ஏ., ராஜலட்சுமி இதுவரை தொகுதிக்கு துரும்பை கூட செய்யவில்லை. ஆனால் ராஜபாளையம் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் இது வரை 900 கோடி அளவிலான திட்டங்களை கொண்டு வந்துள்ளார், என்றார்.