சிவகாசி : மாவட்டத்தில் ஊராட்சிகளில் ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதி பெறாமலும், மனை பிரிவு அனுமதி பெறாமலும் விவசாய இடங்கள் வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இடத்தினை வாங்கியவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.
மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் இடங்களை விற்னை செய்யும் பணி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. வீட்டு மனைகளுக்கான இடங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது . இந்த இடத்திற்கான பத்திர செலவும் மதிப்பீட்டிற்கு ஏற்ப அதிகரிக்கும். ஆனால் விவசாய இடங்களை 20 சென்ட் வரையிலும் பத்திர பதிவு செய்யலாம் என்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி சிலர் விவசாய இடங்களை விற்பனை செய்கின்றனர். அதாவது பாதைகள் ஒதுக்கி வீட்டுமனைகள் போல் பிரித்து பத்திர பதிவு செய்யப்படுகிறது.
இப்படிப்பட்ட இடங்களில் பாதைகளுக்கு உரிய அலுவலரிடம் அனுமதி வாங்காமல் பாதைகள் என பத்திர பதிவு செய்து விடுகின்றனர். பாதைகள், நகர் ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு பாதைகளுக்கு உரிய இடங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பத்திர பதிவு செய்து உரிய பட்டா மாறுதல் செய்யப்பட்டால் மட்டுமே அது பாதையாக அங்கீகாரம் பெறும். நிலத்தின் பயன்பாட்டு வகையை மாற்றாமல் விவசாய இடங்களுக்கான வழிகாட்டு மதிப்பீடுகள் அடிப்படையில் பத்திர பதிவு செய்வதால் அரசுக்கு முத்திரைத்தாள் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இது தவிர விவசாய இடங்களில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்ட அனுமதி இல்லை.
அப்படி கட்டும் பட்சத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அங்கு மின்சாரம், குடிநீர், ரோடு, கழிவுநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர முடியாது. விவசாய இடத்தை விற்பனை செய்தாலும் பாதையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதிவு செய்து பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வீட்டு மனையாக அங்கீகாரம் கிடைக்கும். அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரமுடியும்............
வசதிக்கு வழி இல்லை
ஊராட்சி பகுதிகளிலும் வீட்டு மனைகளின் விலை அதிகரித்து கொண்டே உள்ளது. ஆனால் விவசாய நிலங்களின் மதிப்பு அந்தளவிற்கு உயர்வதில்லை. விவசாய இடமாக 20 சென்ட் வரை பத்திர பதிவு செய்து கொள்ளலாம் என்பதால் மதிப்பும் குறையும் என்பதால் அந்த அடிப்படையில் இடங்கள் பதிவு செய்யப்படுகிறது. இது வரையிலும் தவறில்லை. ஆனால் இடத்தின் உரிமையாளர் பாதையை ஊராட்சி அமைப்பு பட்டா மாற்றாமல் தனது பெயரிலேயே வைத்து கொள்கிறார்.
ஊராட்சி பெயருக்கு மாற்றினால் இடம் வீட்டு மனையாகி விடும். பத்திர செலவு அதிகரிக்கும். இதனாலேயே இவ்வாறு செய்கின்றனர். ஆனால் வீடு கட்டுபவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்த அடிப்படை வசதியும் செய்து தர இயலாது. இனிமேலாவது விவசாய நிலத்தை வீடு, தொழிற்சாலைகள் கட்ட வாங்குபவர்கள் பாதையை உள்ளாட்சி அமைப்பிற்கு மாற்றி தர கேட்க வேண்டும்.ஆறுமுகச்சாமி, முன்னாள் கவுன்சிலர் , சிவகாசி.