ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சிக்கு தாமிரபரணி தண்ணீர் வரத்து நின்ற நிலையில் செண்பகதோப்பு பேயனாற்றிலிருந்து தினமும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு கூட்டுகுடிநீர் திட்ட கிணறுகள் மூழ்கின. விருதுநகர் வரவேண்டிய குடிநீர் சப்ளை ஒரு வாரமாக நிறுத்தபட்டுள்ளது.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் பெய்த மழையில் செண்பகதோப்பு பேயனாற்றில் ஒரு மாதமாக தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் நகராட்சிக்கு சொந்தமான 7 கிணறுகளிலிருந்து தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கபட்டு குடிநீர் சப்ளைக்கு வழங்கபட்டு வருகிறது.
இங்கு 7 கிணறுகளும் பராமரிப்பின்றி கிடந்தநிலையில் நகராட்சி பொறியாளர் ரமேஷின் தீவிர முயற்சியால் புனரமைக்கபட்டு அதிகாரிகளின் கண்காணிப்புடன் செயல்பாட்டிற்கு கொண்டு வரபட்டதால் தற்போது குடிநீர் சப்ளைக்கு பேருதவியாக அமைந்தள்ளது. பேயனாற்றை முறையாக பராமரித்து கூடுதல் கிணறுகள் அமைத்தால் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு உள்ளூர் நீராதாரத்தின் மூலம் தேவையான குடிநீர் பெறலாம்.