தேனி : இணைக்கப்படாத பாதாள சாக்கடை, தட்டுப்பாடுடன் குடிநீர் வினியோகம், எரியாத தெரு விளக்குகளால் இரவில் நடமாட அச்சம் என பழனிச்செட்டிபட்டி பேரூராட்சி 15வது வார்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த வார்டில் முத்துநகர், தென்றல்நகர், சிவனாந்தம் நகர், ஆழ்வார் நகர் பகுதிகள் உள்ளன. ஒன்றரை மாதங்களுக்கு முன் முத்துநகரில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி நடந்தது. சீரமைப்பு பணி முடியாததால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். கழிவுநீர் செல்ல குழாய் அமைக்காததால் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நடைபாதையில் மழைக்காலத்தில் சேறும், சகதியும் சேர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
கழிவுநீர் குழாய் பதிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுப்பதுடன் எரியாத தெருவிளக்குகளை சீரமைத்து கூடுதல் வெளிச்சம் தர புதிதாகவும் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.அவர்கள் கூறியது என்ன:சிரமம்முத்துமணி: முத்துநகர் 2வது தெருவில் 10 வீடுகள் தனித்தீவு போல் உள்ளன. கழிவுநீரோடை, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு இல்லை. குடிநீர் வரி, பாதாள சாக்கடை இணைப்புக்கான கட்டணம் செலுத்தி இருக்கிறோம். ஆனால் பாதாள சாக்கடை அமைக்க வில்லை. 200 அடி கழிவுநீர் செல்லும் குழாய் அமைக்கப்படவில்லை. டூவீலரில் சென்று வருவோர் சிரமப்படுகிறோம். மழைக் காலங்களில் தாழ்வான பகுதியில் கழிவுநீருடன், மழைநீர் சேர்வதால் குளம் போல் ஆகி போக்குவரத்திற்கு தடை ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் 200 அடி கழிவுநீர் குழாயை உடனடியாக அமைக்க முன் வர வேண்டும்.
குடிநீர் பிரச்னைஜெயசித்ரா: இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க இரண்டரை கி.மீ., பயணம் செய்ய வேண்டியுள்ளதால் சிரமப்படுகின்றனர். பகுதி நேர ரேஷன் கடையை முத்துநகரில் அமைக்க வேண்டும். சீரமைப்புப் பணியால் குறிப்பிட்ட வீடுகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. குடிநீர் சப்ளையாகி 12 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டை தடுக்க போலீசார் ரோந்து வர வேண்டும். சுகாதார கேடால் கொசுத் தொந்தரவு அதிகம் உள்ளது. கொசுமருந்து தெளிக்க வேண்டும்.