பாகூர்; குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டின் ஷட்டர்களில் பழுதை சரி செய்து, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாகூர் அடுத்த குருவிநத்தம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 15 ஆண்டுகளுக்கு முன்பு படுகை அணையுடன் சித்தேரி அணை கட்டப்பட்டது. அணைக்கட்டு பகுதியில் 2 மீட்டர் உயரத்திற்கும், ஒரு கி.மீ., நீளம் வரை ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும்.மழை காலங்களில் குருவிநத்தம், இரண்டாயிரவிளாகம், இருளஞ்சந்தை பகுதிகளில் வயல் வெளியில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற, சித்தேரி அணைக்கட்டின் ஷட்டர்கள் பயன்படும்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கட்டின் மணல் போக்கு பாதையில் இரண்டு ஷட்டர்கள் பழுதானது. மீதமிருக்கும் இரண்டு ஷட்டர்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மூடப்பட்டுள்ள ஷட்டர்களின் அடிப்பகுதியில் துருப்பிடித்து உடைந்து, படுகை அணையில் தேங்கிய நீர் வெளியேறி வருகிறது.சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், படுகை அணையில் தண்ணீர் நிரம்பி இருந்தது. தற்போது ஷட்டர்கள் பழுது காரணமாக, நீர் கசிவு ஏற்பட்டு வெளியேறி வருகிறது.இதே நிலை, நீடித்தால் அணையில் தேங்கிய நீர் முழுவதும் வீணாக வெளியேறும் நிலை ஏற்படும். சித்தேரி அணைக்கட்டில் ஷட்டரில் உடைப்பை சரி செய்து, தண்ணீர் வெளியேறுவதைதடுக்க பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.