கம்பம் : மேகமலை சரணாலயத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் பலியாவதை தடுக்க உயரழுத்த மின் பாதையில் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களின் உயரத்தை அதிகரிக்க மின்வாரியம், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சரணாலயத்தில் கம்பம் கிழக்கு சரகத்திற்குட்பட்ட வெண்ணியாறு வனப்பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்பாதையில் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மின் ஒயர்கள் உயரம் குறைந்து தொங்குவதால் யானைகள் செல்லும் போது அவற்றை தொட்டு மின்சாரம் தாக்கி பலியாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரே இடத்தில் 6 யானைகள் பலியானது. அந்தப்பாதையில் உள்ள மின்கோபுரங்களின் உயரத்தை அதிகரிக்க உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மின்வாரியமும், வனத்துறையும் உயரத்தை அதிகரிப்பதாக உறுதி கூறி ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை உயரம் அதிகரிக்கப்படவில்லை. மீண்டும் விபரீதம் ஏற்படாமல் தடுக்க மின் கோபுரங்களின் உயரத்தை அதிகரிக்க மின்வாரியமும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.