நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை, கடந்த 16ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கி நடந்து வருகிறது.இதற்காக, 17 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பு மருந்துகள் முதல்கட்டமாக அனுப்பப்பட்டு, கடந்த 14ம் தேதி புதுச்சேரிக்கு வந்தடைந்தது. இரண்டாவது கட்டமாக, 13 ஆயிரத்து 500 டோஸ் மருந்து நேற்று முன் தினம் புதுச்சேரி வந்து சேர்ந்தது. இவை அனைத்து குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.புதுச்சேரியில் 19 ஆயிரம், காரைக்காலில் 1600, மாகியில் 897, ஏனாமில் 323 உட்பட மாநிலம் முழுதும் 21 ஆயிரத்து 820 சுகாதார பணியாளர்கள் உள்ளனர்.புதுச்சேரியில் அரசு பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் தலா ஒரு இடத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.ஒவ்வொரு மையத்திலும் தினம் 100 நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி கிழமைகளில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.
தினசரி 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயித்திருந்தாலும், 497 பேருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முடுக்கி விட்டுள்ளது.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், '3 நாட்களில் 497 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது எண்ணிக்கையை கூடுதலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நிறைய பேர் ஆர்வமாக முன் வந்து தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்' என்றனர்.