பெரியபட்டினம் : பெரியபட்டினத்தில் அழகு நாயகி அம்மன் கோயில் ஊரணியில் தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வூரணி 3 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதில் தேங்கும் நீர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீரை கொடுத்து வருகிறது. இவ்வூரணியை சுற்றியுள்ள கரைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 2 முதல் 4 அடி ஆழத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. மணற்பாங்கான பகுதியாக உள்ள இடத்தை தேர்வு செய்து இரவு, அதிகாலை நேரங்களில் டூவீலர் மூலம் சாக்குப்பைகளில் நாள்தோறும் மணல் திருட்டு அரங்கேறி வருகிறது.
பெரியபட்டினம் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ஒன்றியகவுன்சிலர் பைரோஸ்கான், ஊராட்சித்தலைவர் அக்பர்ஜான்பீவி ஆகியோர் கூறியதாவது:கடந்த 2 மாதங்களாக அதிகளவில் அழகுநாயகி அம்மன் கோயில் ஊரணியில் மர்ம நபர்கள் டூவீலர்களிலும், ஆட்டோக்களில் தொடர்ந்து மண்ணை கடத்தி வருகின்றனர்.இதுகுறித்து திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் புகார் கொடுத்துள்ளோம். போலீசார், வருவாய்த் துறையினர், கனிமவளத் துறையினர் இணைந்து, தொடரும் மண் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் நிலத்தடிநீர் பாதாளத்திற்கு செல்லும் அபாயம் உள்ளது, என்றனர்.