திண்டிவனம்; திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் பகுதியில், பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்ககூடாது என்ற போலீஸ் எச்சரிக்கையை மீறி, பயணிகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க 19 ஆண்டுகளுக்கு முன், மேம்பாலம் கட்டப்பட்டது. தொலை துாரம் செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு வராமல், மேம்பாலத்தின் வழியாக பல்வேறு ஊர்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வந்தது.பாலத்தின் மேல்பகுதியில் திருவண்ணாமலை, வேலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், திண்டிவனத்தில் இறங்கும் பயணிகளை, இறக்கிவிட்டு செல்கின்றது. பாலத்தின் மேல் பகுதியில் அகலம் குறைவாக இருப்பதால், பயணிகளை இறக்குவதால், மேம்பாலத்தின் மேல் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலையை கடக்கும் பயணிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் இருந்தது. இதைத்தொடர்ந்து, திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி.உத்தரவின் பேரில் மேம்பாலத்தின், மேல்பகுதியில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை இறக்கிவிடக்கூடாது, மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், மேம்பாலத்தின் மேல்பகுதியில் நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வயதான பயணிகள் மேம்பாலத்தின் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வருவதற்கு சிரமப்படுகின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள், புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள், மேம்பாலத்தின் கீழ்பகுதியாக வந்து செல்வதற்கும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.