திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே ஆற்றில் குளிக்க சென்ற மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விழுப்புரம் கே.கே ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜா மகன் சவுந்தர்ராஜன், 16; பிளஸ் 1 படித்து வந்தார். இவர் கடந்த 16ந் தேதி திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாறு எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது சவுந்தர்ராஜன் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடன் இவரது தந்தை மற்றும் உறவினர்கள் சவுந்தர்ராஜனை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சவுந்தர்ராஜன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.