விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகளை, மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் குழுவினர், புறவழிச்சாலையில் சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.மாவட்டத்தில் 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல்களால் பெய்த கனமழைக்கு நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்தன.எஞ்சிய பயிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அரிசி ஆலைகள், விருத்தாசலம் பகுதியில் அறுவடையான நெற்பயிர்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து, அவற்றை 20க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.தகவலறிந்த மாவட்ட மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் குழுவினர், புறவழிச்சாலையில் சித்தலுார் ரவுண்டானா அருகே லாரிகளை காலை 9:00 மணியளவில் மடக்கிப் பிடித்தனர்.அப்போது, நெல் மூட்டைகளுக்கு 1 சதவீத வரியை மார்க்கெட் கமிட்டிக்கு செலுத்த அறிவுறுத்தினர்.அதற்கு, புதிய வேளாண் சட்டத்திருத்த அறிவிப்பின்படி, விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கு விளைபொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்பதால், கமிட்டிக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை என தனியார் ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.இதனை கமிட்டி அதிகாரிகள் ஏற்காததால், கலெக்டரிடம் முறையிடுவதாகக் கூறி, நெல் மூட்டைகளுடன் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு ஆலை ஊழியர்கள் புறப்பட்டனர்.பின்னர், வேளாண் அதிகாரிகள் விசாரணைக்குப் பின், காலை 11:00 மணிக்கு மேல், அனைத்து லாரிகளும் விடுவிக்கப்பட்டன.நெல் மூட்டைகளுடன் சென்ற லாரியை அதிகாரிகள் சிறைபிடித்த சம்பவம், விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.