சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த வட்டத்துாரில் மழையால் பாதித்த பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த வட்டத்துார், நந்தீஸ்வரமங்கலம், நங்குடி, கோதண்டவிளாகம், முடிகண்டநல்லுார், மழவராயநல்லுார், விழுப்பெருந்துறை பகுதி விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து நேற்று வட்டத்துார் பஸ் நிறுத்தம் அருகே சென்னை - கும்பகோணம் சாலையில் காலை 11:30 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி., சுந்தரம் விவசாயிகளிடம் கலைந்து போக அறிவுறுத்தி தனித்தனியாக அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது, விவசாயிகள் கடந்த காலங்களில் எங்கள் பகுதி டெல்டாவில் இருந்ததை அரசு நீக்கியதை கண்டிக்கிறோம்.தற்போது சம்பா நடவு செய்துள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முழு சேதமடைந்துள்ளன.அரசு, கண்துடைப்பாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்கி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். சேதமான பயிர்களுக்கு முழு தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதற்கு டி.எஸ்.பி., உரிய அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் 12:00 மணிக்கு கலைந்து சென்றனர்.