நெல்லிக்குப்பம்; காராமணிக்குப்பம் வார சந்தை 5 மாதத்திற்கு மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக அதே பகுதியில் கடலுார் - பண்ருட்டி சாலையையொட்டி, 5 ஏக்கர் நிலம் உள்ளது.இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை வாரசந்தை நடைபெறும். சந்தையில் கடை போடும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்காக ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கால் ஜூலை மாதம் நடைபெற இருந்த ஏலம் நடக்கவில்லை. தற்போது இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான 5 மாதத்திற்கு மட்டும் உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் நேற்று ஏலம் நடந்தது. இதில் லோகநாதன் என்பவர் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.