திருவொற்றியூர் - சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தலைக்கவசத்தின் முக்கியத்துவம் உணர்த்தும் வகையில், வினோத விழிப்புணர்வு நிகழ்ச்சி, மக்களை 'மெர்சல்' ஆக்கும் வகையில் நடைபெற்றது.சென்னை, திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் சந்திப்பில், 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, புதிதாக இருசக்கர வாகனம் வாங்கியவர்களுக்கு, தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று மதியம் நடைபெற்றது.தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்லும் நபர், தலைகவசமின்றி செல்லும் போது, விபத்து ஏற்பட்டால், தலை துண்டிக்கப்பட்டு, சாலையில் உருண்டோடுவது போல், வாலிபர் ஒருவர் தத்துரூபமாக நடித்து காண்பித்தார்.இதை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், அதிர்ந்து போயினர்.மேலும், அவ்வழியே சென்ற சிலர், நிஜத்தில் வாலிபர் ஒருவர், விபத்தில் சிக்கி காயமடைந்ததாக கருதி, மீட்க முயற்சித்தனர். பின், விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றதும், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.வினோத விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைக்கவசம் அணிவதன் அவசியவத்தை வெகுவாக உணர்த்தியதாக, பார்வையாளர்கள், வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.மேலும், சாலை விதிகள் குறித்து, அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்ததுடன், துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.நிகழ்ச்சியில், போக்குவரத்து ஆய்வாளர் ராமதுரை உள்ளிட்ட போக்குவரத்து போலீசாரும் பங்கேற்றனர்.