திருத்தணி - திருத்தணி அரசு மருத்துவமனையில், முதல் முறையாக, ஒரு பெண்ணுக்கு, மார்பக புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.திருத்தணி ஒன்றியம், சிறுகுமி காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி மல்லிகா, 50. இவர், கடந்த, 2ம் தேதி, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வலது மார்பக பகுதியில், புற்றுநோய் கட்டி இருந்ததை, 'ஸ்கேன்' மூலம் கண்டறிந்தனர்.மேலும், கட்டியின் தன்மையை பார்த்து, அறுவை சிகிச்சை செய்து அகற்ற தீர்மானித்தனர்.அதை தொ டர்ந்து, கடந்த, 6ம் தேதி, அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வெங்கடேஷ், ராஜ்குமார், ஆரத்தி, மயக்க மருத்துவர் கோகுலகண்ணன் ஆகியோர், இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, மார்பக புற்றுநோய் கட்டியை அகற்றினர். தற்போது மல்லிகா நலமாக உள்ளார்.இது குறித்து மல்லிகா கூறுகையில், 'மூன்று மாதங்களுக்கு முன், மார்பக புற்றுநோய் என, கண்டறிந்த பின், பீரகுப்பம் அரசு மருத்துவர்கள், அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தினர். என், குடும்ப வறுமையால், தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்தேன். மருத்துவர்கள் புற்றுநோய் கட்டியை அகற்றினர். தற்போது நலமாக உள்ளேன்' என்றார்.