ஊத்துக்கோட்டை - ஆரணி ஆற்றின் மேல் நடைபெறும், பாலப் பணி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, மந்தகதியில் நடப்பதால், போக்குவரத்து வசதியின்றி பல கிராமமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்றின் மேல் பாலம் கட்ட, 2018ல், மத்திய சாலை நிதி திட்டம் மூலம், 27.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்திற்கு பாலத்தின் இடதுபுறம் தற்காலிக தரைப்பால சாலை போடப்பட்டது.'நிவர், புரெவி' புயல்களால் பெய்த மழையில், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நவ.25ம் தேதி தரைப்பால சாலை உடைந்து, போக்குவரத்து முடங்கியது.மறு கரைக்கு செல்ல, 40 கி.மீட்டர் சுற்றிச் சென்றனர். முழுமை பெறாத பாலத்தின் மேல் செல்ல, இரு பக்கமும், இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. வணிகர்கள் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பால், டிச.25ம் தேதி பாலத்தின் வலதுபுறம் புதிய சாலை போடப்பட்டது.டிச.5ம் தேதி பெய்த மழையில், புதிய பாலமும் சேதமானது. ஒரு வாரத்திற்கு பின், பைக், கார், ஆட்டோ செல்ல பாதை போடப்பட்டது.தரைப்பால சாலை சேதத்தால், நவ.25ம் தேதி முதல், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆற்றின் மறுகரைக்கு செல்ல ஆட்டோவிற்கு, 20 ரூபாய் கொடுத்து, அங்கிருந்து பஸ் மூலம், மற்ற பகுதிக்கு மக்கள் செல்வதால், பண செலவு அதிகமாகிறது.வேலைக்குச் செல்பவர்கள், தினமும், பாலத்தை கடக்க மட்டும், 40 ரூபாய் செலவழிக்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. பஸ் போக்குவரத்து முடக்கத்தால், 30 கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு, நேற்று, கலெக்டர் பொன்னையா, வருவதாக இருந்ததை அறிந்த வணிகர் சங்கத்தினர், பாலப்பணி தாமதம், தரைப்பால சாலை அமைப்பதில் மெத்தனம் ஆகியவற்றை புகாராக வழங்க, தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.கலெக்டர் வருகை ரத்தானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். பாலப்பணி, சாலை அமைத்தலை துரிதப்படுத்த, இன்று, 22ம் தேதி காலை, கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுத்தனர்.இந்நிலையில், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, மொபைல்போன் மூலமாக தொடர்பு கொண்டு, வரும், 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்குள், சாலை அமைத்து தருவதாக கூறினார்.இதனால், அவர்களின் கோரிக்கையை ஏற்று, வரும், 24ம் தேதி மாலைக்குள் பணிகள் முடிக்கவில்லை எனில், 25ம் தேதி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும், என, ஊத்துக்கோட்டை வணிகள் சங்க தலைவர் நடராஜன் தெரிவித்தார்.