மேல்நல்லாத்துார் - மேல்நல்லாத்துார் ஊராட்சியில், சிறுபாலத்திற்கு தடுப்புகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மணவாள நகர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார். இப்பகுதியில், உள்ள நெடுஞ்சாலை வழியே, அரசு, தனியார் பஸ், தொழிற்சாலை பஸ், கனரக வாகனம், டூ - வீலர் என, தினமும், 8,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே, ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் பகுதியில் உள்ள சிறு பாலத்தில், தடுப்பு சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையில் உள்ளன.நெடுஞ்சாலைத் துறையினர், சிறு பாலத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.