அரண்வாயல்குப்பம்- அரண்வாயல்குப்பம் பகுதியில், நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி, பெற்றோர், மாணவர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரண்வாயல்குப்பம் நடுநிலைப் பள்ளியில், அரண்வாயல், அரண்வாயல்குப்பம், முருஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, 125க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.இங்கு பயிலும் மாணவ - மாணவியர் உயர் கல்வியான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயில வேண்டுமானால், 5 கி.மீ., துாரமுள்ள கொப்பூர் மற்றும் மணவாள நகர், திருவள்ளூர் சென்று தான் படிக்க வேண்டும்.கடந்த 2012-ல், பொதுமக்கள் சார்பில், பள்ளியை தரம் உயர்த்துவதற்கு, அரசுக்கு 1 லட்சம் ரூபாய் செலுத்தி, எட்டு ஆண்டுகளாகியும், நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை.மேலும், கடந்த ஆண்டு இப்பகுதி மக்கள் பள்ளியை தரம் உயர்த்த கோரி, பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழகத்தில், 35 மாவட்டங்களில், 50 நடுநிலைப் பள்ளிகளை அரசு தரம் உயர்த்தியதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரண்வாயல்குப்பம் நடுநிலைப் பள்ளி, தரம் உயர்த்தப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று காலை, மாணவ - மாணவியருடன், திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் ப்ரீத்திபார்கவி, தாசில்தார் செந்தில்குமார், டி.எஸ்.பி., துரைபாண்டியன் மற்றும் செவ்வாப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தினர். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.