பொன்னேரி - நேரடி கொள்முதல் நிலையத்தை எந்தவித அறிவிப்பும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.பொன்னேரி பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு, நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது, சம்பா பருவத்திற்கும், விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த மேற்கண்ட கொள்முதல் நிலையம், மீஞ்சூர் அடுத்த, மேட்டுப்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, பொன்னேரி வட்டார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இது குறித்து பொன்னேரி வட்டார விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சி.ராமு தெரிவித்ததாவது:தனி நபர்கள் சிலரின் வியாபார நோக்கத்துடன், இரவோடு இரவாக நேரடி கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இடமாற்றத்திற்கான காரணம் குறித்து வேளாண் துறை மற்றும் கொள்முதல் நிலைய அதிகாரிகளை கேட்டால், சரியான பதில் இல்லை.இதனால் நேரடி கொள்முதல் நிலையம், தனி நபர்களின் கட்டுப்பாட்டில் செல்வதுடன், விவசாயிகள் எளிதில் அணுக முடியாத நிலை ஏற்படும்.மேலும், பல கிராமங்களுக்கு, பொன்னேரி பகுதிதான் மையமாக உள்ளது. அதனால், நேரடி கொள்முதல் நிலையத்தை பழையபடி, அதே இடத்தில் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.