காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலை, ஒலிமுகமதுபேட்டை வளைவில், இரு புறமும் லாரிகள் நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது, வழக்கு பதியப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்தார்.காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் - வேலுார் செல்லும் சாலையில், ஒலிமுகமதுபேட்டை வளைவு, குறுகிய பகுதியாக இருந்ததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது.இதை தடுக்கும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத் துறை சார்பில், அந்த இடம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, ஒலிமுகமதுபேட்டை சாலை விரிவு பகுதியில், இரு புறமும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த பகுதியில், போக்குவரத்துக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இப்பகுதியைச் சுற்றி அரிசி ஆலைகள் மற்றும் கனரக வாகனங்கள் எடைமேடை போன்றவை உள்ளதால், ஏராளமான லாரிகள் அங்கு நிறுத்தப்படுகின்றன.போக்குவரத்திற்கு இடையூறு இன்றி, அந்த வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.இது குறித்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:ஒலிமுகமதுபேட்டை சாலையில், லாரிகளை நிறுத்தக் கூடாது என, லாரி ஓட்டுனர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் கேட்டு, பின் மீண்டும் நிறுத்துகின்றனர். இனி, அந்த இடத்தில் லாரிகளை நிறுத்தினால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.