மாமல்லபுரம்; மாமல்லபுரத்தில், சுற்றுலாவிற்கு மேம்படுத்தப்பட்ட, மரகத பூங்கா, பயனின்றி வீணாகிறது.மாமல்லபுரத்தில்,பல்லவர் கால தொல்லியல் சின்னங்களை காண, சுற்றுலாப் பயணியர் வருகின்றனர்.கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள், சற்று தொலைவில் இருக்கும் நிலையில், நடந்து செல்லும் பாதசாரி பயணியர் இளைப்பாற, பூங்கா ஏற்படுத்த வேண்டும் என, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 2009ல், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், மரகத பூங்கா அமைத்தது.இங்கு, கலைநிகழ்வு மேடை, பார்வையாளர் மாடம், பயணியர் இளைப்பாறல் இடம், நடைபாதை உள்ளது.துவக்கத்தில் பராமரித்து, நாளடைவில் முட்புதருடன் சீரழிந்தது. நம் நாளிதழில் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, சுற்றுலாத் துறை, 2018ல் புதர் அகற்றி, வார இறுதி கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், இங்கு, 2019ல் சந்தித்ததை முன்னிட்டு, பேரூராட்சி நிர்வாகம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், மலர்ச் செடிகள், குறு மரங்களுடன் மேம்படுத்தியது. மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி, இந்நிர்வாகமே தற்போது பராமரிக்கிறது. ஆனால், பயணியர் அனுமதிக்கப்படாமல், மூடியே உள்ளது.நாளடைவில் பராமரிக்காவிட்டால், மீண்டும் சீரழியும். சுற்றுலா வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட இதை, பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலால், பூங்காவை மேம்படுத்தி, பராமரித்து வருகிறோம்.சுற்றுலா வளர்ச்சிக் கழக பூங்கா என்பதால், தொடர்ந்து நாங்களே பராமரிக்கவும் இயலாது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகமே முடிவெடுக்கவேண்டும். அப்போதுதான் பயணியரை அனுமதிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.