தர்மபுரி: தர்மபுரியில், மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், 'தீ மொபைல் ஆப்' குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அலுவலர் ஆனந்த் தலைமை வகித்தார். இதில், பொதுமக்கள் தங்களது மொபைலில், இந்த 'ஆப்' பதிவிறக்கம் செய்து, தீ விபத்து, கிணற்றில் விழுந்த கால்நடைகள் மீட்பு, மழை வெள்ளத்தின் போது ஏற்படும் பேரிடர், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் சிக்குதல், அபாயகரமான கழிவுகளை அகற்ற, ஆபத்தில் சிக்கும் வன விலங்குகளை மீட்பது, உள்ளிட்ட அபாய நேரத்தில், இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், இந்த 'மொபைல் ஆப்' ஐ பயன்படுத்தி, தீயணைப்பு துறையின் சேவைகளை விரைந்து பெற, இது உறுதுணையாக இருக்கும் என, பொதுமக்களுக்கு அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், நிலைய அலுவலர்கள் ராஜா மற்றும் குணசேகரன் உள்பட, ஏராளமான தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.