தர்மபுரி: ''பா.ம.க., அறிவித்த இட ஒதுக்கீடு போராட்ட அறிவிப்பு, பிற அரசியல் கட்சியினர் துவங்கியுள்ள தேர்தல் பிரச்சாரத்தை விட, அதிக வரவேற்பை பெற்றுள்ளது,'' என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
தர்மபுரியில் நேற்று நடந்த, வன்னியர்களுக்கான, 20 சதவீத தனி ஒதுக்கீடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: வன்னியர்களுக்கு, 20 சதவீத தனி ஒதுக்கீட்டை, தமிழகத்திலுள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஆதரிக்கின்றனர். இதுவரை, இது தொடர்பாக, 5 கட்டமாக அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆறாம் கட்டமாக வரும், 29ல், மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், எங்கள் கோரிக்கை ஏற்கப்படா விட்டால், ராமதாஸ் நேரடியாக களம் இறங்கும் நிலை ஏற்படும். பல்வேறு அரசியல் கட்சியினர், தேர்தல் பிரசாரத்தை துவங்கி உள்ளனர். ஆனால், நாங்கள் அறிவித்த வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது, தேர்தல் பிரசாரத்தை விட, அனைத்து கட்சிகளிலும் உள்ள, வன்னியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கூட்டணி குறித்த முடிவுகளை ராமதாஸ், அன்புமணி முடிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.பி.,க்கள் பாரிமோகன், செந்தில் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.