காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்திலுள்ள ஏரிகளுக்கு, தண்ணீர் வரும் வாய்க்கால்கள் புதர்மண்டி உள்ளதை, அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, கே.ஆர்.பி., அணை உபரி நீர், காரிமங்கலத்தில் உள்ள கும்பாரஹள்ளி, மொட்டலூர், திண்டல், பந்தாரஹள்ளி, அடிலம் உள்ளிட்ட, 34க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு பாய்கிறது. இந்நிலையில், இங்குள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள், தூர்வாராமல் உள்ளன. இதனால், சமீபத்தில் பெய்த பருவமழை மற்றும் புயல் மழையால், தண்ணீர் செல்ல வழியின்றி, மணிக்கட்டியூர் ஏரியின் மதகு அருகே, வாய்க்கால் உடைந்து, மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாமல் வீணானது. இதேபோல், காரிமங்கலம் பெரியேரியில் இருந்து, குட்டூர் ஏரி, வண்ணான் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளுக்கு, செல்லும் பாசன வாய்க்கால்களும், தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு, புதர் மண்டி உள்ளன. எனவே, காரிமங்கலம் பெரியேரி முதல், குட்டூர், வண்ணான், பெரிமிட்டஹள்ளி, உச்சம்பட்டி, தெல்லம்பட்டி, கரகபட்டி ஏரிவரை, தண்ணீர் செல்லும் வாய்க்காலில் உள்ள புதர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.