கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நாச்சிகவுண்டனூரை சேர்ந்தவர் நவீன்குமார், 24; இவர், ஊத்தங்கரை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பகல், 2:30 மணிக்கு, ஊத்தங்கரை முன்னியப்பன் கோவில் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரில், மின் கம்பிக்கு இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராமல் கம்பியில் மின்சாரம் வந்ததில், அவரை மின்சாரம் தாக்கி, கம்பியில் தொங்கினார். உயிருக்கு போராடியவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப் பட்டார். இது குறித்து, ஊத்தங்கரை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., கார்மேகம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.