கிருஷ்ணகிரி: ஹெல்மெட் அணிந்து, இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்துத் துறை சார்பில், 32வது சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த, 18ல் துவக்கி வரும் பிப்., 17 வரை ஒரு மாதம், 'சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு' என்ற தலைப்பை மையப்படுத்தி கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலத்தின் கீழ், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், ஏ.டி.எஸ்.பி., ராஜி, டி.எஸ்.பி., சரவணன் ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, ரோஜா பூவையும், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பையும் வழங்கி, ஹெல்மெட் அணிந்து வண்டியை ஓட்ட வேண்டும் என, அறிவுறுத்தினர். இதேபோல், கிருஷ்ணகிரி டோல்கேட்டில், ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புச்செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.