ஈரோடு: ''ஆசிரியர் தேர்வு அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய பாடத்திட்டம், மருத்துவ கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை பட்டியலிட்டு, விரைவில் தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். கடந்த, 2013, 2017ல் நடந்த டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு, காலி பணியிடம் நிரப்பப்படும். கூடுதல் ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்புக்குப்பின், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். அதுபோல, அரசு பள்ளிகளில் அலுவலக உதவியாளர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் காலிப்பணியிட விபரம் பெறப்பட்டு, தேவையான பணியாளர் நியமிக்கப்படுவர். மத்திய அரசு, 500 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. அந்நிதியில், அரசு மாணவியர் பள்ளிகளில் கூடுதலாக தலா ஒரு யூனிட் அளவில் கழிப்பறை கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
லேப்டாப் முறைகேடு? 'மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வாங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், ''லேப்டாப் வாங்கும் பணியை, ஐ.டி., மினிஸ்டர் கவனிப்பார். நாங்கள் வாங்குவதில்லை. லேப்டாப் வினியோகம் மட்டுமே செய்கிறோம். நான் பள்ளி கல்வித்துறைக்குத்தான் அமைச்சர். எனக்கு அதுபற்றி எனக்கு தெரியாது,'' என்றார்.