அந்தியூர்: அந்தியூரில், இரட்டை கொலை செய்த கூலி தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனை, ஏழாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, வெள்ளைப்பிள்ளையார் கோவில் வாட்ச்மேன் வடிவேல், 50; டி.என்.பாளையத்தை சேர்ந்த பெட்ஷீட் வியாபாரி கந்தசாமி, 50; பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 55; இவர்கள் மூவரும், அந்தியூர், கொன்னமரத்தையன் கோவில் வளாகத்தில், 2018 நவ.,30ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வந்த மர்ம ஆசாமி தாக்கியதில், வடிவேல், கந்தசாமி இறந்தனர்; பெரியசாமி உயிர் தப்பினார். இந்நிலையில் டிச.,2ல், அந்தியூர், ஆத்தப்பபாளையத்தை சேர்ந்த குமார் என்பவரை, கத்தியால் குத்தி கொல்ல முயன்ற, அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி நல்லசாமி, 42, என்பவரை, அந்தியூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும், கோவிலில் தூங்கிய இருவரை, தலையில் தாக்கி கொலை செய்ததாகவும் கூறினார். இது தொடர்பான வழக்கு விசாரணை, ஈரோடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி லதா, நேற்று தீர்ப்பு வழங்கினார். இரட்டை கொலை செய்ததற்காக, இரட்டை ஆயுள் தண்டனை, கொலை செய்துவிட்டு மேலும் ஒருவரை கொல்ல முயன்றதற்காக, ஏழாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து நல்லசாமி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.