திண்டுக்கல் : வங்கிகளில் ரூ.ஒரு கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீத வரி என்பதில் இருந்து விவசாயிகள், விளைபொருள் விற்பனையாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, திண்டுக்கல் வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசால் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. இதில் இடம்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஜி.எஸ்.டி., வரி விகிதம் குழப்பமாக உள்ளது. ஒரே மாதிரியாக 5 மற்றும் 12 சதவீதம் மட்டும் இருந்தால் வர்த்தகர்கள் வரி ஏய்ப்பை தவிர்த்து, நேர்மையாக தொழில் செய்ய முயல்வார்கள். ஜி.எஸ்.டி., யில் ரூ.2 கோடி வரை விற்று வரவு இருக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். வங்கிகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவிதம் வரி செலுத்த வேண்டும் என்பதில், விளை பொருட்களை விற்பனை செய்ய சிக்கல்கள் உள்ளன. இதில் விவசாயிகள், வேளாண் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தனிநபர் ரூ.5 லட்சம் வரை வருமான வரி தேவையில்லை என்பதை மாற்றி ரூ.10 லட்சமாக அறிவிக்க வேண்டும். செலவினங்களுக்கு ரொக்கமாக ரூ.30 ஆயிரம் வரை வழங்க அனுமதிக்க வேண்டும். லாரி வாடகை டி.டி.எஸ்., பிடித்தம் வேண்டாம் என்பதை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். சரியாகவும், தவறாமல் வரி செலுத்துவோருக்கு வரும் ஆண்டுகளில் 10 சதவீதம் தள்ளுபடி கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.