குளித்தலை: தொடர் மழையால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி, தோகைமலை வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமாரிடம், மனு அளிக்கப்பட்டது. அப்போது, விவசாயிகள் கூறியதாவது: தோகைமலை பகுதிகளில், தொடர் மழையால் சம்பா சாகுபடி உள்பட, மானாவாரி விவசாய பயிர்களுக்கு கடுமையாக சேதம் ஏற்பட்டு உள்ளது. நெல், துவரை, உளுந்து, மிளகாய் மற்றும் காய்கறி செடிகள் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளன. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா பயிர்கள், மீண்டும் முளைத்துள்ளன. பல பகுதிகளில், வயலில் சாய்ந்த நெல் மணிகள் அழுகியுள்ளன. இதேபோல் துவரை, குச்சிக்கிழங்கு, உளுந்து, மிளகாய், காய்கறிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் உள்பட, காப்பீடு செய்யாத அனைத்து விவசாயிகளுக்கும், ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தோகைமலை வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில்,''பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து, ஆய்வு பணி நடந்து வருகிறது. முழுமையாக ஆய்வு செய்த பின்பு, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பப்படும்,'' என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் இலக்குவன், மாவட்ட செயலாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர் ரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.