கரூர்: ''உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம், 475 வேளாண் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன,'' என, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் பேசினார்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் சார்பில், வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி நடந்தது. கலெக்டர் மலர்விழி பார்வையிட்டார். பின்னர், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திர விற்பனையாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இதில், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் பேசியதாவது: உழவர் உற்பத்தியாளர் குழு, வேளாண் இடுபொருட்களை கூட்டாக கொள்முதல் செய்வதால், விலை குறைவதோடு, போக்குவரத்து செலவினமும் குறைகிறது. தினசரி பண்ணை வரவு செலவு, கணக்கு பதிவேடு பராமரித்தல், கூட்டாக விளை பொருட்களை விற்பனை செய்வதால், குறைந்த சாகுபடி செலவில் நிறைந்த லாபம் ஈட்டப்படுகிறது. கரூர் மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக இதுவரை, 13 ஆயிரத்து, 400 சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, 670 உழவர் ஆர்வலர் குழுக்களும், 134 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை வாயிலாக, 98 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, 475 வேளாண்கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கு, ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு இதுவரை, 60.45 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்) உமாபதி, துணை இயக்குனர் உமாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.