கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, திருவள்ளுவர் மைதானம் உள்ளது. இதில், பல ஆண்டுகளுக்கு முன் ராஜலிங்கம் மன்றம் கட்டப் பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள், நாடகம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. கரூர் நகர மக்கள் நடை பயிற்சி செல்ல, திருவள்ளுவர் மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், செட் அமைக்கப்பட்டுள்ள ராஜலிங்க மன்றத்தில் பொதுமக்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். விளையாட்டு வீரர்களும் மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ராஜலிங்கம் மன்றத்தை சிலர் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருவதால், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கரூர் நகரில் நடைபயிற்சி செல்ல போதிய இட வசதி கிடையாது. மாவட்ட விளையாட்டு அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ளன. அங்கு அதிகாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், திருவள்ளுவர் மைதானத்தை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், சமீப காலமாக, ராஜலிங்க மன்றத்தை சிலர் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். அருகில் உள்ள மதுக்கடையில், மதுபாட்டில்கள் வாங்கி, ராஜலிங்க மன்றத்தில் அமர்ந்து குடிக்கின்றனர். அங்கேயே பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர். அங்கு அமரக் கூட முடியவில்லை. உடைந்த பாட்டில்கள் உள்ளதால், மைதானத்தில் வாக்கிங் செல்ல முடியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர். நகராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.