ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் ஊரணிக்குள் கார் பாய்ந்ததில் ஒருவர் பலியானார்.
காரைக்குடியை சேர்ந்தவர் மகாலிங்கமூர்த்தி 46. வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார். ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் வசித்த இவரது மாமியார் வயது மூப்பால் ஜன.,21ல் இறந்தார்.அவரது இறுதி சடங்கிற்கு குடும்பத்தினருடன் வந்த மகாலிங்க மூர்த்தி இரவில் காரில் ஊர் திரும்பினார்.காரை அவர் ஓட்டினார். உறவினர்கள் இருவர் காரில் இருந்தனர்.கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரத்தை அடுத்த பேராவூர் அருகே கார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர ஊரணிக்குள் பாய்ந்தது. இதில் நீரில் மூழ்கிய மகாலிங்கமூர்த்தி பலியானார்.
இதனை பார்த்த கிராம மக்கள் காரையும், சிக்கியவர்களையும் மீட்டனர். உடன் சென்ற உறவினர்கள் இருவர் காயத்துடன் தப்பினர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தேவிப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.