ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழைக்கு சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளிலேயே அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலத்தையொட்டியுள்ள இளையான்குடி வட்டாரத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, செங்குடி, சீனாங்குடி, சேத்திடல், உள்ளிட்ட பகுதிகளிலும், ஆர்.எஸ்.மங்கலத்தையொட்டியுள்ள சிவகங்கை மாவட்ட பகுதியான வண்டல், கட்டனுார், விசவனுார், அளவிடங்கான், முத்துார், குறிச்சி, பூலாங்குடி, வாணியக்குடி, சாத்தனுார், சீவலாதி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
அக்டோபரில் விதைப்பு செய்யப்பட்ட நிலையில், டிசம்பரில் மிளகாய் செடிகள் காய்த்து மகசூல் நிலையை அடைந்தன. இந்நிலையில், இப்பகுதிகளில் ஏற்பட்ட தொடர் மழையால், செடிகள் அழுகியதுடன், செடிகளில் உள்ள மிளகாயும், மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் செடிகளிலேயே வெம்பி அழுகியது. மிளகாய் பழம் பறிக்க வேண்டிய நேரத்தில், செடிகள் காய்களுடன் அழுகியதால், ஏக்கருக்கு 5 குவிண்டால் ( ஒரு குவிண்டால்; 100 கிலோ) வரை விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.