பரமக்குடி : பரமக்குடியில் தி.மு.க., மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்,' என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டார்.
பாம்பூர் சமத்துவபுரத்தில் பேசியபோது, தி.மு.க., தலைவரால் பாம்பூர் சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியின் பாரபட்ச நடவடிக்கைகளால் சமத்துவபுரம் பாழடைந்து உள்ளது. 10 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமம் அடைகின்றனர்.ஆட்சி மாற்றம் என்பது பெண்கள் கையில் தான் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 நாள் வேலை இல்லை. சரியான சம்பளம் கொடுப்பது இல்லை. பயிர் இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை.
முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் போராட்டமே வாழ்க்கையாக உள்ளது,என்றார். எமனேஸ்வரம் பகுதி யில் கைத்தறி நெசவாளர்கள்,பரமக்குடியில் மிளகாய் நவதானிய வியாபாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் சந்திப்பு நடந்தது.தொடர்ந்து தி.மு.க., கொடி கட்டிய போது மின்சாரம் தாக்கி பலியான உரப்புளி ராஜேஷ்குமார் குடும்பத்தாருக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
பொட்டிதட்டியில் செங்கல் சூளை தொழிலாளர்கள் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,முன்னாள் மாவட்ட பதிவாளர் பாலு, மாவட்ட கவுன்சிலர் முருகேசன், போகலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா, ஒன்றிய தி.மு.க., பொருளாளர் குணசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சாயல்குடி: கன்னிராஜ புரத்தில் பனைத்தொழிலாளர்களுடன் தி.மு.க., எம்.பி., கனிமொழி கலந்துரையாடினார். பனைத்தொழிலாளர்களுக்கு மருத்துவக்காப்பீடும்,அவசர காலத்திற்கு மருத்துவ உதவித் தொகை கிடைக்க வேண்டும்.ரேஷனில் கருப்பட்டியை பயனாளிகளுக்கு வழங்கிட வேண்டும் என பனைத்தொழிலாளர்கள் வற்புறுத்தினர்.