மதுரை : போலீஸ் தனிப்படைகளை கலைக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பா.ம.க., வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் முருக கணேசன் தாக்கல் செய்த பொதுநல மனு:போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிய நியமிக்கப்பட்ட போலீசாரை தனிப்படை என்ற பெயரில் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனால் ஸ்டேஷன்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது.மதுரையில் 22 சட்டம்-ஒழுங்கு, 16 குற்றப்பிரிவு ஸ்டேஷன்கள் உள்ளன. ஒரு ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 60 பேரை அரசு அனுமதித்துள்ளது. ஆனால் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து, அதில் சில போலீசாரை பணியில் ஈடுபடுத்துகின்றனர்.
அந்த ஸ்டேஷன் கட்டுப்பாட்டாளராக உள்ள உதவி கமிஷனரின் அலுவலக பணிக்கு சில போலீசாரை பயன்படுத்துகின்றனர். கமிஷனர், துணைக் கமிஷனர், உதவி கமிஷனர் தனிப்படைகளில் போலீசாரை ஈடுபடுத்துகின்றனர்.தனிப்படை போலீசார் காவல்துறை சீருடை அணியாமல், சிவில் உடையில் இருப்பர். நகரில் நடக்கும் போலீசாரின் அத்துமீறல்களுக்கு, இவர்களே காரணமாக உள்ளனர். மதுரை ஸ்டேஷன்களில் 1025 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், 260 போலீசார் மட்டுமே உள்ளனர். இவர்கள் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் சிலர் தற்கொலையை நாடுகின்றனர்.
தனிப்படை அமைக்க சட்டம், விதிகள், காவல்துறை நிலையாணை, வழிகாட்டுதல் இல்லை. தனிப்படைகளை கலைக்க வேண்டும். தனிப்படைகள் அமைப்பதற்கான வழிகாட்டுதலை உருவாக்கி, பொறுப்புகள், கடமைகளை நிர்ணயிக்கக்கோரி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முருக கணேசன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு பிப்.,19 க்கு ஒத்திவைத்தது.