மதுரை, : புதுக்கோட்டை கறம்பக்குடியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கறம்பக்குடி திருமணஞ்சேரி சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனு: கறம்பக்குடி தாலுகா திருவோணம் சாலையில் விட்டல்தாஸ் குடியிருப்பு உள்ளது. இதில் கறம்பக்குடி பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் வசிக்கின்றனர். இது பராமரிப்பின்றி, மோசமான நிலையில் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு 2020 ஆக.,1 ல் திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் சேகரிப்புத் தொட்டியில் விழுந்து குமார் என்பவரின் குழந்தைகள் கிருத்திக் ரோஷன்6, அரவிந்த் 4, பலியாகினர்.கறம்பக்குடியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் திறந்த நிலையில், பாதுகாப்பின்றி உள்ளன.
நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இவற்றை மூட வேண்டும். சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களின் கவனக்குறைவால் குழந்தைகள் பலியானதற்கு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு, ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.தொட்டியை மூட உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததே விபத்திற்கு காரணம். இதற்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சண்முகம் மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பு,'பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது,' என தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள்,'கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டு வழக்கை முடித்தனர்.