ஊத்துக்கோட்டை : நீர்நிலைக்கு மக்கள் அளித்த முக்கியத்துவத்தால், ஆட்ரம்பாக்கத்தின் குடிநீர் தேவை பூர்த்தியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், ஆட்ரம்பாக்கம் ஊராட்சியில், ஆட்ரம்பாக்கம், கோவிந்தராஜகுப்பம் ஆகிய இரு பகுதிகள் உள்ளன. ஆறு வார்டுகளில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில், விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது.இங்குள்ள ஆட்ரம்பாக்கம், ஈஸ்வரன் கோவில் அருகே, தாமரைக்குளம் உள்ளது. 5 ஏக்கர் பரப்பில் உள்ள இக்குளத்தில், தண்ணீர் வற்றுவதில்லை. கடந்தாண்டு, இந்த குளம் குடிமராமத்து பணி மூலம், 5 லட்சம் ரூபாயில் கரை சீரமைத்து பலப்படுத்தப்பட்டது.
சமீபத்தில் பெய்த மழையால், நிறைந்து காணப்படும் இந்த குளத்தின் நீரை, அப்பகுதி மக்கள் குடிநீராகவும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கிராமத்து மக்கள் ஒற்றுமையுடன் நீரை மாசுபடாமல் பாதுகாத்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:பல ஆண்டுகளாக இந்த குளம் வற்றாமல் உள்ளது. இந்த குளத்தின் நீரை நாங்கள் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறோம்.
எங்கள் கிராம மக்கள் இணைந்து, இந்த குளத்தின் நீரை மாசுபடாமல் பாதுகாத்து வருகிறோம். விரைவில், குளத்தை சுற்றி வேலி அமைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பல இடங்களில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தும், அசுத்தப்படுத்தியும் வரும் நிலையில், ஆட்ரம்பாக்கம் கிராமத்தில் குளத்தை பாதுகாத்து வரும் மக்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.